அரஸ்டுக்கும் ஆதாரா? அதிர்ச்சியில் அரண்டு போன போலீஸார்!

First Published Oct 6, 2017, 6:43 PM IST
Highlights
aadhaar is mandatory for arrest a person police cops confused


கைது செய்யவும் ஆதார் கட்டாயமா என அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் போலீஸார். 
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றால், அவர்களின் ஆதார் எண் கட்டாயம் பெற வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, அத்தகைய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று கூறினர். ஆனால், ஆதார் கட்டாயம் என்று ஆக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அவர்கள் மறுக்கவும் இல்லை. 

ஆதார் எண், அரசின் பல்வேறு சேவைகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது.  கேஸ் மானியம், வங்கிக் கணக்கு தொடங்குதல், பான் கார்டுடன் இணைத்தல்,  செல்போன் எண் பெறுவதற்கு, நோயாளிகள் சிகிச்சை கண்காணிப்புக்கு என பல விதங்களில் ஆதார் எண் கட்டாயமாகக் கேட்டுப் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக, போலீஸார் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது,  அவரது ஆதார் எண்ணைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதாவது சம்பந்தப்பட்டவரின் அடையாளமாக, ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்களை இணைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதாகவும், அதனை ஒட்டி காவல்துறை தலைமை இத்தகைய உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

பொதுவாக, குற்றச் சம்பவம் குறித்து தெரியவரும் போது, அல்லது சந்தேகத்தின் பேரில் தொடர்புடைய நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரிப்பார்கள்.  கைது எனும் அவசிய சூழ்நிலை வரும்போது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர். அப்போது ஆதார் அட்டை எண் கொடுக்க வேண்டும் என்ற நிலை வரும்போது, வேண்டுமென்றே தொடர்புடைய நபர்கள் ஆதார் எண்களை மறைக்கலாம், அல்லது எண் பெறாமல் இருந்திருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் தங்களுக்கு மிகவும் சிரமம்தான் என்று போலீஸார் புலம்புகின்றனர். 

click me!