
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.
நாடு முழுதும் பரபரப்பாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கில், இதுவரை குற்றம் சாட்டப் பட்டு, பல கட்ட விசாரணைகள் நடத்தப் பட்ட நிலையில், சிபிஐ., தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தேவையான போதுமான ஆதாரங்களை வைக்க முடியவில்லை என்றும், சந்தேகத்திற்கு இடமின்றி ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு எதிராக வலுவான வகையில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று கூறினார் நீதிபதி ஓ.பி.ஷைனி.
இன்று காலை நீதிமன்றம் கூடியதும், காலை 10.30க்கு இதற்கான தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஓ.பி.ஷைனி. ஒரே வார்த்தையில், அனைவரும் விடுதலை என்றும், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் போதிய ஆதாரங்களுடன் அரசுத் தரப்பால் நிரூபிக்க இயலவில்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றார் ஓ.பி.ஷைனி.
6 வருடங்கள் நடந்த விசாரணையில் ராசா கனிமொழி இருவரும் விடுவிக்கப் பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது பலருக்கு.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராசா, கனிமொழியை விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தில்லி நீதிமன்றம் முன்பு கூடியிருந்த திமுக நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர்.