சாதிய வன்மத்தோடு இட ஒதுக்கீடு கொடுத்த எடப்பாடி பழனிசாமி மதுரை மண்ணிற்குள் நுழையக்கூடாது என தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
அதிமுக அதிகார மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள இபிஎஸ், தனது பலத்தை தொண்டர்களுக்கு நிரூபிக்கும் வகையில் மதுரையில் மாநில மாநாடு நடத்த தேதி அறிவித்தார். அதன் படி வருகிற 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஓபிஎஸ் அணியினர் சென்னையில் தங்கள் அணியின் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் இபிஎஸ்க்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்
இது ஒரு புறம் நடைபெறும் நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுகவினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் தேசிய கழகம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், சாதிய வன்மத்துடன் 10.5% உள் இட ஒதுக்கீடு மூலம் நம் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி மற்றும் இனத்துரோகியை புறக்கணிப்போம் என அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநாடு நடத்தினால் மட்டும் மறந்து விடுவோமா உங்கள் துரோகத்தை, புறக்கணிப்போம் எடப்பாடியை, புரிந்து கொள்வோம் அரசியல் துரோகத்தை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடியே மதுரை மண்ணிற்குள் நுழையாதே என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
“ ஜெயிலர் படத்திற்கு காட்டும் ஆவலை, இதற்கும் காட்ட வேண்டும்..” தமிழிசை சௌந்தரராஜன்