
கமலின் அரசியல் பிரவேசம் என்பது விஷப்பரீட்சை, வீண் பரீட்சையாகத்தான் முடியும் என்றும் நிழல்வேறு; நிஜம் வேறு என்பதை காலம் அவருக்கு உணர்த்தும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிரிக்கட்சிகளின் வரிசையில் கூட அல்லாமல், உதிரிக் கட்சிகளில் ஒன்றாகத்தான் அது முடிய நேரிடும் என்கிற கடந்த கால வரலாற்றை அவருக்கு நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன்.
இயல்பில் புத்திசாலியாக தன்னை காட்டிக் கொள்ள விரும்பும் அவர், உண்மையில் மிகவும் பிற்போக்குவாதி. அவருடைய படங்களில் பல பிற்போக்குத்தனமான கருத்துக்களை முன்வைப்பவையே. பெண் கதாபாத்திரங்களை அவர் அளவுக்குக் கொச்சைப்படுத்தி மலினமான ரசனையை வெகுஜன மக்களிடம் விதைத்து விட்டவர். தான் கூறும் கருத்துக்கள் யாருக்கும் எளிதில் புரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.
புரியாமல் பேசுவதும், கருத்துக் கூறுவதும் மட்டுமே அறிவு என எண்ணுபவர். அவருடைய கருத்துக்கள் அனைத்திலும் வலிந்து உருவாக்கிக் கொள்வார். அக்கருத்துக்களில் இருண்மைத் தன்மை இருப்பதை நீங்கள் அவதானிக்க முடியும். எதையும் நேரடியாக, வெளிப்படைத்தன்மை கொண்ட கருத்துக்களை எதிர்பார்க்கும் அரசியல் களம் என்பது முற்றிலும் நேர்மாறானது என்பதை அவர் போகப் போகத்தான் கற்றுக் கொள்வார்.
அவருடைய ‘விஸ்வரூபம்’ படம் உட்பட பல படங்களில் தீவிரவாதம் என்றால், அது குறிப்பிட்ட சமுதாயத்தின் சொத்து என்பது போல சிறுபான்மையினரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவார். இது தொடர்பான விவகாரங்களின்போது அம்மா தலையிட்டு அப்படத்தை வெளியிட நேர்ந்தது. இதுதான் அவரின் முற்போக்குத் தனம்.
இரண்டு பிரதான ஆட்டக்காரர்கள் அவுட் ஆகிவிட்டார்கள் என்று திடீரென்று மட்டை தூக்கி ஆட வந்திருப்பவர் இவர். ஏற்கனவே இந்தக் களத்தில் பயிற்சி பெற்ற அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் நிறைய இருப்பதை மறந்து விட்டார். கமல்ஹாசனுக்கு இப்படி அரசியல் ஆசை வந்திருப்பதை நினைத்து எல்லோரும் பரிதாபப்படுகிறார்கள்.
நடிப்பில் செவாலியே விருது பெற்ற நடிகர் திலகம் சிவாஜிகணேசன்; மக்களின் யதார்த்த எண்ண ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதின் மூலம் கற்பனை வேறு; யதார்த்தம் வேறு என்பதை அவரது அரசியல் களம் பாடம் நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது. இப்படி எண்ணற்ற நடிகர்களின் பட்டியலை ஆதாரங்களோடு அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்னும் திரைத்துறையில் இருந்து அரசியல் களத்திற்கு வந்த பலர் காணாமல்போன கடந்த காலத்தை அவருக்கு நினைவூட்ட எல்லோரும் விரும்புகிறார்கள்.
திரைப்படங்களில் பல பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்த கமல், பல தயாரிப்பாளர்கள் அதள பாதாளத்துக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தப் புதிய கட்சி அரசியல் பிரவேசம் என்பது விஷப் பரீட்சை, வீண் பரீட்சையாகத்தான் முடியும். நிழல் வேறு; நிஜம் வேறு என்பதை காலம் கமலுக்கு உணர்த்தும் என்று வைகைச் செல்வன் கூறியுள்ளார்.