நடிகர் ராதாரவிக்கு ஒரு நியாயம்... ஆ. ராசாவுக்கு ஒரு நியாயம்..? கிழிந்து தொங்கும் திமுக முகத்திரை..!

By Asianet TamilFirst Published Mar 28, 2021, 9:06 AM IST
Highlights

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நயன்தாராவை கொச்சைப்படுத்தி பேசிய நடிகர் ராதாரவியை திமுகவிலிருந்து நீக்கிய திமுக தலைமை, இன்று முதல்வரின் தாயைக் கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறப்பு பற்றி அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசமாகப் பேசியதும் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் தலைவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக ஒரு மாநில முதல்வரின் பிறப்பை கொச்சைப்படுத்தி ஆ.ராசா பேசிய விவகாரத்தில், திமுக  தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினோ, ‘கண்ணியமாகப் பேச வேண்டும், கண்ணியக் குறைவான பேச்சை ஏற்க முடியாது’ என்று பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிட்டு முடித்துக் கொண்டதும் பொதுவெளியில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மார்ச் மாதத்தில், ‘கொலையுதிர்காலம்’ என்ற பட விழாவில் அப்போது திமுகவிலிருந்து நடிகர் ராதாராவி பங்கேற்று பேசிய ஒரு விஷயம் சர்ச்சையானது. “நயன்தாரா நல்ல நடிகை. இங்கு பேயாகவும் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். இன்று யார் வேண்டுமானாலும் சீதையாக நடிக்கலாம். ஒரு காலத்தில் சீதையாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை அழைப்போம். அன்று பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்கள் சீதையாக நடித்தார்கள். இன்று பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் சீதையாக நடிக்கிறார்கள்” என்று ராதாரவி கேவலமாகப் பேசிய பேச்சு சர்ச்சையாக மாறியது.
அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நேரம் என்பதால், இதில் ஸ்கோர் செய்ய நினைத்த திமுக தலைமை, உடனடியாக நடிகர் ராதாரவியை, திமுகவிலிருந்து நீக்கியது. “நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிக்கையும் வெளியிட்டது திமுக.


இப்போதும் தேர்தல் நேரம். முதல்வரின் பிறப்பையும், அவருடைய தாயையும் களங்கப்படுத்தும் நோக்கில் பேசிய ஆ.ராசாவின் பேச்சைக் கண்டு திமுகவினரே முகம் சுழிக்கிறார்கள். எனவே, ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மு.க. ஸ்டாலின் ஓர் அறிக்கை விட்டதோடு, ஓரிறு நாட்களில் இந்த விவகாரம் ஆஃப் ஆகிவிடும் என்றும் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், நடிகர் ராதாரவிக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா என்று சமூக ஊடங்களில் பலரும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்களை அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசிய விவகாரத்தில் அன்று ஒருவரை பலி கொடுத்ததும், இன்று இன்னொருவரை காப்பாற்றுவதும் ஏன் கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
 

click me!