மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வலம் வந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கனவு திட்டமான, மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்கூட்டர்கள் வழங்கினர். கலைவாணர் அரங்கதிற்கு வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 70,000 மரக்கன்றுகள் நடும் விழாவினை துவங்கிவைத்தார். பின்னர் பல்வேறு தொழில் துறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் பெண்கள் 5 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கினார்.இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒரு சப் - இன்ஸ்பெக்டர் மட்டும் தாமதமாக இங்கும் அங்கும் வலம் வந்து கொண்டிருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அசோக் என்பதும், சப் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த போலி போலீஸ் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதைதொடர்ந்து அவரிடம் இருந்து போலீஸ் உடை, பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பரிமுதல் செய்துள்ளனர்.