நான் சாகும்போது உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் போதும்.. முதல்வரிடம் அமைச்சர் சேகர் பாபு உருக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 3:16 PM IST
Highlights

இதன் மூலமாக நம் முதல்வர் நவீன ராமானுஜராக திகழ்கிறார் என பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த தருணத்தில் நான் முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன், இயற்கை என்னை இறுதியாக அழைக்கும் போது, உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வரவேண்டும் என உருக்கமாக பேசினார். 

முதல்வரிடத்தில் நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன்,  இயற்கை என்னை இறுதியாக அழைக்கும் போது உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தால் போதும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் உருக்கமாக பேசியிருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மத்தியிலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் செயல்பட்ட விதம் தமிழக மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் முன்னாள் திமுக தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றோரின் பெருங் கனவுகளில் ஒன்றான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி காட்டியுள்ளார். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவரும் நிலையில், ஒரு சில இந்து அமைப்புகள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோயில் வருவாய் மற்றும் அதன் நிர்வாகத்தை மட்டுமே இந்து அறநிலைத்துறை கண்காணிக்கலாமே தவிர, பூஜை புனஸ்காரம் முறைகளின் தலையிடக்கூடாது என்றும், அது முற்றிலும் ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலை துறை மீதான மானியக் கோரிக்கை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அப்போது உரையாற்றிய அத்துறை அமைச்சர் சேகர்பாபு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தந்தை பெரியாரின் பெரும் கனவு, அதை நிறைவேற்ற வேண்டுமென அண்ணா முயற்சி செய்தார், பின்னர் கருணாநிதி அதை சட்டமாக்க வடிவமைத்துத் தந்தார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் அரியணை ஏறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.இதன் மூலமாக நம் முதல்வர் நவீன ராமானுஜராக திகழ்கிறார் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த தருணத்தில் நான் முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன், இயற்கை என்னை இறுதியாக அழைக்கும் போது, உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வரவேண்டும் என உருக்கமாக பேசினார். அவரின் இந்த பேச்சு அவையில் இருந்த பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. இதில் சில திமுக உறுப்பினர்கள் உணர்ச்சிவயப்பட்டனர். தொடர்ந்து பேசிய சேகர்பாபு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்று வரை சுமார் 640 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 கோடியை மதிப்பிலான சொத்துகள் மீட்கப்படும் என உறுதியளித்தார். அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் இணைந்தவர் சேகர்பாபு என்றாலும்கூட, குறுகிய காலத்தில் தனது அதிரடி நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம், திமுக தலைமையின் விசுவாசத்தை, நம்பிக்கையை பெற்றவராக  வலம்வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!