சனாதன தர்மம் யாருக்கும் எதிரியல்ல. சனாதன தர்மத்திற்கு ஆதியும் இல்லை, முடிவும் இல்லை. இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களுக்கும் முன்பாக உருவானது சனாதன தர்மம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உதயநிதி பேச்சு- பாஜக போராட்டம்
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் எதிர்த்து வருகின்றனர். அந்த கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும், அங்கு பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததை கண்டித்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கூறி மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து போரட்டத்தில் பேசிய அண்ணாமலை, 70 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சானாதன தர்மத்தையும், இந்து மதத்தையும் திமுக கொச்சைப்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் சாமானியர் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை உதயநிதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களின் கண்டனக் குரலைப் பார்த்து 4 நாட்களுக்கு பிறகு உதயநிதியும் முதல்வரும் நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என்று அறிக்கை கொடுத்தார்கள். சனாதன தர்மம் யாருக்கும் எதிரியல்ல. சனாதன தர்மத்திற்கு ஆதியும் இல்லை, முடிவும் இல்லை. இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களுக்கும் முன்பாக உருவானது சனாதன தர்மம்.
சனாதன தர்மம் பிற மதங்களுக்கு எப்போதும் எதிரியல்ல. விதவைகள் உடன்கட்டை ஏறுவது எப்போது வந்தது தெரியுமா? போர்கள் நடந்த போது தோற்றவர்களின் மனைவிகளை கவர்ந்து செல்வதை தவிர்க்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள். பெண்கள் உடன்கட்டை ஏறுவது சனாதன தர்மம் சொல்லாத ஒன்று. ராஜாராம் மோகன்ராய் என்ற சனாதனி தான் பெண்கள் உடன்கட்டை ஏறுவதை முடிவுக்கு கொண்டு வந்தார். அப்போது திராவிடர் கழகம் இருந்ததா? பெரியார் இருந்தாரா? குஜராத்திலிருக்கும் ஒரு சனாதனி தான் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதைத் தடுத்தார்.
அறநிலையத்துறையின் இணையத்தின் படி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44,000 கோவில்கள் உள்ளன. சிறிய கோவில்கள் உள்ளிட்ட 3 லட்சம் கோவில்கள் உள்ளன. தமிழ்நாட்டில் எந்த கோவிலில் கும்பாபிசேகம் நடந்தாலும் திமுக ஆட்சியில் அந்த கும்பாபிசேகத்தை அறநிலையத்துறை செய்ததாக கூறிவிடுகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். இந்த போராட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீரென சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட நான்கு பிரிவின் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.