இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என தெரிவித்த மதுரை ஒருங்கிணைந்த பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மீது போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக- பாஜக மோதல்
திமுக- பாஜக இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதும் அதற்க்கு திமுகவினர் பதில் அளிப்பதும் சவால் விடுவதும் வாடிக்கையாக மாறி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் இந்து மதம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆ.ராசாவிற்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட பாஜக மாநகர் தலைவர் உத்தம ராமசாமி "ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்" என்று பேசினார். மேலும் வன்முறை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார். இதனையடுத்து இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், தமிழக முதல்வர், தந்தை பெரியார், ஆ.ராசா எம்.பி.,. குறித்து பேசி, மிரட்டல் விடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தபெதிகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
பாஜக மாவட்ட தலைவர் கைது
இதனையடுத்து உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், பாஜக மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் யாகம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தன் சுயலாபத்துக்காக, சுய விளம்பரத்திற்காக இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்க நினைக்கின்ற சக்திகளுக்கு யார் பாடம் புகட்டுகிரார்களோ தெரியாது, மதுரையில் இருந்து நாங்கள் பாடம் போட்டுவோம். நான் ஒரு இந்தியன், இந்து என்கிற அடிப்படையில் பாடம் புகட்டும் காலம் மதுரையில் இருக்கும் என தெரிவித்தார்.மேலும் அரசியல் நாடகம் ஆடி தன் சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதுபோக நாங்கள் பிறந்த மதத்தை இழிவு படுத்திக் கொண்டே இருப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்,
மதுரை மாவட்ட தலைவர் மீது வழக்கு
நாங்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் தேசத்தை ஆளுகின்ற புனிதமான இயக்கத்தை சார்ந்த காரிய கருத்தர்கள் என்கிற அடிப்படையில் தான் பொறுமையாக இருக்கின்றோம். அந்தப் பொறுப்பை என்று துறந்து நான் இந்தியன், இந்து என்கிற நிலைக்கு வருகிறோமோ அன்று அவர்களுடைய நாக்கு அவர்கள் உடலில் இருக்காது வெட்டி விடுவோம். இதற்காக பல வழக்குகள் வந்தாலும் பரவாயில்லை. இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே மதுரை பாஜக மாவட்ட தலைவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
திராவிட மாடல் பெயரை கேட்டாலே அலறும் மோடி, அமித் ஷா.. மேடையிலேயே பாஜகவை கிழித்து தொங்கவிட்ட ஆ.ராசா.!