நாளை முதல் இந்த 23 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடும்.. மாவட்டம் விட்டு மாவட்டம் இயங்கும்.. அமைச்சர் தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 27, 2021, 11:47 AM IST
Highlights

பேருந்துகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு, கூடுதல் தளர்வுகள் அளித்து ஜூலை 5ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், வகை மூன்றில் உள்ள நான்கு மாவட்டங்களில் நகை, துணிக்கடைகளை திறக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மேலும் பல தளர்வுகளுடன் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில் வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர்,விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொது பேருந்து போக்குவரத்தை,  கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்.

ஏற்கெனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 28) முதல் பேருந்துகள் இயக்கப்படும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள19,290 பேருந்துகளில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் பேருந்து இயக்கப்படும். 

பேருந்துகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

click me!