7,200 புதிய வகுப்பறைகள்.! காலை உணவுத் திட்டம் முதல் தகைசால் பள்ளி வரை.! திட்டங்களை லிஸ்ட் போட்ட முதல்வர்.!

By Raghupati RFirst Published Oct 19, 2022, 4:25 PM IST
Highlights

சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் 

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், 'இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது.

பள்ளிக்கல்வித்துறை

இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கென அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்புப் பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியும் என மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி தேவை என்று கண்டறியப்பட்டு, அவற்றைப் படிப்படியாக ஏற்படுத்தித் தருவதற்கென திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க..தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

அரசு பள்ளி மாணவர்கள்

அத்திட்டத்தின்படி, நடப்பாண்டில் சுமார் ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை நமது அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளார்கள். எனவே, அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய்மதிப்பீட்டில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும்.

முதல்வர் ஸ்டாலின் உறுதி

நடப்பாண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, தற்போது 115 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளை நாடி வரும் மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..‘சிங்கார சென்னை 2.0 முதல் 2,607 அறிவிப்புகள் வரை.. சொல்லாததையும் செஞ்சுருக்கோம்.! மாஸ் காட்டிய ஸ்டாலின்’

click me!