
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்யும் மதத் தலைவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா வரும் 15-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா, தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்யப்படுகிறது என்பதால், அரசியல் கட்சிகளிடையே எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பது சந்தேகமே.
1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத அமைப்புகளை தவறாக பயன்படுத்த தடைச் சட்டத்தின் கீழ் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் எம்.பி. துஷ்யந்த் சவுதாலா கொண்டு வருகிறார். மத தலைவர்களை அரசியல் கட்சிகளஅ தங்களின் சுயநலத்துக்காக பிரசாரம் செய்ய தடை கோரி அவர் இதை கொண்டு வருகிறார்.
இது குறித்து அரியானா மாநிலத்தைச் சேர்ந்த எம்பி. சவுதாலா கூறுகையில், “ எந்த மதத்தின் தலைவரும், மத நிறுவனத்தைச் சேர்ந்தவரும், ஆன்மீக தலைவரும், எந்த அரசியல் கட்சிக்கும், அல்லது குழுவுக்கும், தனிநபருக்கும் ஆதரவாக தேர்தலில் வாக்கு சேகரிக்க கூடாது என்று 2015ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு தேர்தலில் மதத் தலைவர்கள் பிரசாரம் செய்தால்,அதிகபட்சமாக 7ஆண்டுகள் சிறை விதிக்கப்படும், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த மசோதாவின் நோக்கம் அரசியல் கட்சி தலைவர்கள், மத நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, மதத்தலைவர்களும் அரசியல் கட்சியில் சேரக்கூடாது என்பதாகும். இந்த மசோதா மீண்டும் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.