
ஏழு பேர் விடுதலை தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாக ஊடகங்கள் கொளுத்திப் போட்ட நிலையில் முடிவில் வைகோ ஏமாறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வைகோ வருகை தந்திருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு வைகோ புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக இது போன்ற முக்கிய சந்திப்புகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பது வைகோ வழக்கம். ஆனால் அன்றைய தினம் வைகோ செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அதே சமயம் மறுநாள் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வைகோ கேட்டுக் கொண்டிருந்தார். இதன் மூலம் அதற்கு முந்தைய நாள் வைகோ ஸ்டாலினை சந்தித்து பேசியது ஏழு பேர் விடுதலை தொடர்பாகத்தான் என்பது தெரியவந்தது. ஆனால் வைகோ அறிக்கைக்கு பிறகும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு திடிரென சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு விரைந்தனர்.
இதனை அடுத்து ஏழு பேர் விடுதலை தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முந்தைய நாளோ ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் ஓடிக் கொண்டிருந்தன. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் மற்றும் தலைமை வழக்கறிஞரை சந்தித்த காரணத்தினால் எழுவர் விடுதலை தொடர்பாகவே ஆலோசனை நடைபெறுவதாக நம்பப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேர ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து அமலில் வைத்திருப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறினார். மேலும் மராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து வந்துள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் தங்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் ரகுபதி விளக்கம் அளித்தார். எழுவர் விடுதலை தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டள்ளது என்கிற கேள்விற்கு அமைச்சர் ரகுபதி திமுகவின் நிலைப்பாடு ஏழு பேரையும் விடுதலை செய்வது தான் என்று அமைச்சர் பதில் அளித்தார்.
அதே சமயம் ஏழு பேர் விடுதலை விவகாரம் தற்போது குடியரசுத் தலைவரிடம் இருப்பதாக தனக்கு தெரியவந்துள்ளதாகவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதோடு அது குறித்து அமைச்சர் ரகுபதி பேசிவிட்டு புறப்பட்டார். இதன் முலம் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தற்போது வரை எந்த உறுதியான முடிவையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே அமைச்சர் ரகுபதி, தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடத்தும் தகவல் அறிந்து வைகோவிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆலோசனை எழுவர் விடுதலை தொடர்பாக அல்ல என்பதை அறிந்து வைகோ ஏமாற்றம் அடைந்ததாக கூறுகிறார்கள். இதே போல் ஸ்டாலினை நேரில் சந்தித்து வைகோ பேசிய போதும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக சாதகமான பதில் வைகோவிற்கு கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் தான் அன்றைய தினம் வைகோ செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.