
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் 12ம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்புகளும் பள்ளிகளில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. தமிழகத்தில் மே 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறவிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன. முன்னதாக மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வை மே 31ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதும் குறித்தும் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று மீண்டும் அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர் ஆசியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்தும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.