
எட்ட வேண்டிய 7 இலக்குகளை அடிப்படையாக கொண்டு மாநில வளர்ச்சிக் குழுவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அக்குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் தமிழக முதலமைச்சர் தலைமையில் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைப்பெற்ற நிலையில் முதலமைச்சர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1971 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருணாநிதி அவர்களால் மாநில திட்டக்குழு உருவாக்கப்பட்டது. அது முதல்வரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வந்தது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை ஆராய்ந்து அறிக்கையாக அரசுக்கு வழங்குவது, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் புது ஆலோசனைகள் அளிப்பது அக்குழுவின் செய்லபாடாக இருந்து வந்தது. இந்நிலையில் மு.க ஸ்டாலின் அவர்கள் மாநில திட்டக்குழுவை, மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்து அறிவித்துள்ளார்.
அதன்படி அதற்கான உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டப்பின் தமிழக முதலமைச்சர் தலைமையில் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில், வளரும் வாய்ப்புகள், மகசூல் பெருக்கம், குறையாத தண்ணீர், உயர்தரக்கல்வி மற்றும் மருத்துவம், எழில்மிகு மாநகரம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு என அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளில் ஏழு இலக்குகளை அடைய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், கல்வி, மருத்துவம் ,விவசாயம், குடிநீர் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் அதில் ஆலோசனை வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற அந்த ஆலோசனைக்கூட்டத்தில், துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனார் என்பது குறிப்பிடதக்கது.