7 பேர் விடுதலைக்கு குழிபறிக்கும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க! அதிர வைக்கும் காரணம்!

By vinoth kumarFirst Published Sep 13, 2018, 12:42 PM IST
Highlights

தமிழர்கள் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் மிக தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான தி.மு.க அமைதி காப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழர்கள் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் மிக தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான தி.மு.க அமைதி காப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தமிழர்கள் ஏழு பேரையும் விடுவிப்பது என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்றால் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கெடு விதித்தார். அப்போதைய காங்கிரஸ் அரசு உடனடியாக தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது. 

மேலும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது உடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து எதிர் அரசியலும் காங்கிரஸ் செய்தது. இதன் காரணமாக அப்போது தமிழர்கள் ஏழு பேரை விடுவிக்க முடியாமல் போனது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கூறிய நிலையில் அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆளுநர் எப்போது என்ன முடிவெடுப்பார் என்று தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தனது தந்தையை கொலை செய்த 7 பேரையும் விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியிருந்தார். இதே போல் காங்கிரஸ் மூத்த தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான நாராயணசாமி கூட ஏழு பேரையும் விடுவிப்பதில் தனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றார்.  ஆனால் ராகுல் காந்தியே ஏழு பேரையும் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளதால் அவர்களை விடுவிப்பதில் தவறில்லை என்றும் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதே சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசரோ, ஏழு பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று பரபரப்பு பேட் அளித்தார். அதுவும் எங்கிருந்து அந்த பேட்டி அளித்தார் என்றால், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து. 

 மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்த பிறகு திருநாவுக்கரசர் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக பேசினார். அத்துடன் மறுநாளே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளரான ரந்தீப் சுர்ஜேவாலாவும், ஏழு தமிழர்கள் விடுதலைக்கு எதிராக மிகத் தீவிரமான பேட்டி அளித்தார். ஏழு பேரையும் தீவிரவாதிகள் என்றும் அவர்களை ஒரு போதும் விடுவிக்க கூடாது என்றும் அவர் கூறினார். அதாவது சென்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்த பிறகு திருநாவுக்கரசர் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக பேசுகிறார். 

இதே போல் மறுநாள் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஏழு பேரையும் தீவிரவாதிகள் என்கிறார். இதுமட்டும் அல்லாமல் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றதை போலவே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மீண்டும் அழைத்து வந்து பேட்டி அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து தி.மு.க தொடர்ந்து மவுனம் காக்கிறது. ஏழு பேர் விடுதலையை கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பது குறித்து தற்போது வரை தி.மு.கவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனிடையே ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டால் தமிழர்கள் மத்தியில் மோடி அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் நல்ல பெயர் கிடைத்துவிடும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதனை விரும்பாமலேயே காங்கிரஸ் ஏழு பேர் விடுதலையை தற்போதுமிக தீவிரமாக எதிர்ப்பதாக சொல்லப்படுகிறது.

click me!