நான் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமர்! மார்தட்டும் டி.டி.வி!

By vinoth kumarFirst Published Sep 13, 2018, 12:30 PM IST
Highlights

தான் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமர் என்று அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

தான் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமர் என்று அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டாலும் சரி கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சரி 37 இடங்களை வெல்வது உறுதி என்று 2 மாத காலமாகவே டி.டி.வி கூறி வருகிறார். அதிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அ.ம.மு.க 25 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்து வருகிறார்.

மேலும் தங்களுடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளும் ஆர்வத்துடன் உள்ளதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார். எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்பதை தற்போது கூற முடியாது என்றும் அவர் பொடி வைத்து பேசி வருகிறார். இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தற்போது பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே காரணம் என்றார். மத்திய அரசு கலால் வரியை குறைக்கலாம் என்றும் மாநில அரசு மதிப்பு கூட்டு வரியை குறைக்கலாம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

 

மோடி அரசு மீதும் எடப்பாடி அரசு மீதும் தமிழக மக்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதாக தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஏனென்றால் தேர்தலின் போது தான் மக்கள் தங்களின் கோபத்தை மோடியின் மீதும் எடப்பாடியின் மீதும் காட்ட உள்ளதாக டி.டி.வி தெரிவித்தார்.  நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் எதிர்கொள்ள அ.ம.மு.க தயாராக உள்ளதாக கூறிய டி.டி.வி., அனைத்து தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெறுவத உறுதி என்று அவர் கூறினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வென்ற பிறகு பிரதமரை தேர்வு செய்யப்போவதே தங்களது அ.ம.மு.க தான் என்றும் டி.டி.வி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா கடந்த 2004ம் ஆண்டு மற்றும் 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களின்  பாது தான் தான் அடுத்த பிரதமர் என்று கூறி பிரச்சாரம் செய்தார். அந்த இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. ஆனால் பிரதமர் குறித்து எதுவும் பேசாமல் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அந்த கட்சி வென்றது. இந்த நிலையில் அ.ம.மு.கவின் தினகரனோ அடுத்த பிரதமரை தீர்மானிக்கப்போவதே தாங்கள் தான் என்று பேசி வருகிறார். ஆனால் தேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறத என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!