35 மாவட்டங்கள் இல்லங்க….. தமிழகத்தில் 60 மாவட்டங்கள் வேண்டும் … அன்புமணி அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jul 18, 2019, 9:51 PM IST
Highlights

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கவை என்றாலும் , மற்ற மாவட்டங்களையும் பிரித்து மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் அமைக்கப்படும் என முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள்தொகை 39.98 லட்சம் ஆகும். இம்மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதன் மூலம் அங்கு வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் மிக நீண்ட எல்லைகளை கொண்ட மாவட்டம் வேலூர் மாவட்டம் ஆகும். 

வேலூர் மாவட்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு செல்ல 220 கி.மீ. பயணிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த எல்லையிலிருந்து வேலூருக்கு செல்வதாக இருந்தாலும் குறைந்தது 100 கி.மீ கடக்க வேண்டும். இது நிர்வாக வசதிக்கு எவ்வகையிலும் ஏற்றதல்ல. அதனால்,  வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்,

திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகியவையும் 5000 சதுர கி.மீக்கு அதிக பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டங்கள் ஆகும். ஒரு மாவட்டம் இந்த அளவுக்கு பரந்து விரிந்து கிடப்பது அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்காது. ‘சிறியது தான் அழகு என்ற தத்துவத்தின்படி பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களை அதிகம் உருவாக்க வேண்டும் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.


.
தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் பெரியவையாகவே உள்ளன. 

ஒவ்வொரு மாவட்டமாக பிரிப்பதை விட இந்த மாவட்டங்களை ஒரே நேரத்தில் பிரிப்பது தான் சரியாக இருக்கும். அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை மறுவரையரை செய்து 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!