எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பணும்... வேலூர் தேர்தலில் எதுக்கு போட்டியிடணும்..? கமலின் அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published Jul 18, 2019, 9:39 PM IST
Highlights

வேலூரில் தேர்தல் ரத்து செய்ய காரணமான வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்பே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது.
 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் மக்கள் நீதி மய்யம்  வேலூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
வேலூரில் ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், நாம்  தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில் வேலூர் தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காத மக்கள் நீதி மய்யம், ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


 அதில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களின்போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா சட்டவிரோதமாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாகப் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


மேற்குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்பே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது.


 இந்தச் சூழலில் மக்களின் நம்பிக்கையைக் காப்பது மிக முக்கியம். எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்த இருக்கிறது. எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது” என்று அருணாச்சலம் தெரிவித்துள்ளார். 

click me!