
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 561 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத நிலையில் தற்போது தமிழகத்திககு 561 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 153 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஒகி புயல் அம்மாவட்டத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. ரப்பர், வாழை,பலா உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.
அது மட்டுமல்லாமல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். அவர்களில் ஏராளமேனோர் இன்னும் வீடு திரும்பவில்லை.
இதே போன்று கேரள மாநிலமும் ஒகி புயலால் கடுமையான சேதத்தை சந்தித்தது. அங்கும் 56 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் பலர் மாயமாகியுள்ளனர். இதையடுத்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதே போன்று கன்னியாகுமரி மாவட்ட மக்களும் ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தமிழக, கேரள மாநில மக்களின் கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு ஒகி புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 561 கோடி ரூபாயும், கேரள மாநிலத்துக்கு 153 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.