கல்வியாளர் வீட்டில் 5000 கோடி பதுக்கலா ? திமுக பகீர் புகார் !!

By Selvanayagam PFirst Published Apr 3, 2019, 7:45 PM IST
Highlights

தமிழகத்தில் கல்வியளார் ஒருவர் 5000 கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்,பாரதி தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்களான அலோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் சென்னை வந்தனர். இவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் உயர்அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் வில்சன், கிரிராஜன் உள்ளிட்டோர் இவர்களை சந்தித்து  மனு அளித்தனர். 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி , தபால் வாக்குகளை கடைசி நாளில் வாக்குப்பதிவில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தருவார்கள். 

ஆனால் தற்போது அதை காவல் அதிகாரிகளிடம், கல்வி அதிகாரிகளிடம் வழங்கி  அந்த தபால் வாக்குகளை செல்லததாக ஆக்கவோ, அல்லது அதை அரசுக்கு ஆதரவாகவோ வாங்குவதற்கான செயல் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம்.

அதேபோன்று அதிமுக மீது என்ன புகார் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை. முதல்வரே ராணுவ வீரர்களின் பெயர் சொல்லி ஓட்டு கேட்கிறார் என்பது குறித்தும் புகார் அளித்துள்ளோம். 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி சபேசன் என்பவரிடம் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதேபோன்று அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கெங்கே பணத்தை பதுக்கி வைத்துள்ளார். வாய்கிழிய பேசுகிறாரே அமைச்சர் ஜெயக்குமார் அவர் என்னென்ன வேலை செய்கிறார், எங்கெங்கே அவரது பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் சேகரித்து வருகிறோம்.

நிச்சயமாக உங்களுக்குச் சொல்வோம். ஒரு கல்வியாளர் வீட்டில் ரூ.5000 கோடி பதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதுகுறித்து புகார் கொடுத்துள்ளோம். அதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றார்..

யார் அந்தக் கல்வியாளர் என்பதை இப்போது சொல்ல முடியாது. இப்போது ஊடகங்களில் சொல்லிவிட்டால் அவர் தப்பித்துவிடுவார். அவர்கள் எங்கெங்கே பணம் பதுக்கி வைத்துள்ளார்கள் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்ன ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

click me!