ரெட்ட இலை... எம்.ஜி.ஆர், அம்மா.... இன்னமும் மறக்காத மலைவாழ் மக்கள்... கண் கலங்கிப்போன பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர்!!

By sathish kFirst Published Apr 3, 2019, 7:25 PM IST
Highlights

எங்க உசுர மறப்போம்! ஆனா ரெட்ட இலையை மறப்போமா? எம்.சி.ஆர மறப்போமா? அம்மாள மறப்போமுங்களா!: அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை நெகிழ வைத்த மலை மக்கள் 

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சட்டசபை தொகுதிகள் வருகின்றன. மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் ஆகியன. இவற்றில் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை இரண்டும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவை. மீதி நான்கும் கோயமுத்தூர் மாவட்டத்துக்கு பாத்தியப்பட்டவை. அதில் வால்பாறை மட்டும் தனி தொகுதி. 

வால்பாறை தொகுதி சாதி, சமூக நீதி அடிப்படையில் தனி தொகுதி என்று பிரிக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு புறம் இருந்தாலும் கூட...இந்த தொகுதியின் பெரும்பான்மை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் மிக முக்கிய ஜோனுக்குள் வருகின்றன. மிகப்பெரிய மலை வன பகுதியான இங்கு எஸ்டேட் பணியாளர்கள்தான் நிரம்பி வழிகின்றனர். இம்மக்களின் மனதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் இன்னமும் பச்சை மரத்தில் வெட்டப்பட்ட எழுத்துப் போல் மிக அழுத்தமாக, ஆணித்தரமாக பதிந்துள்ளனர். 

இதயக்கனி படத்தில் அரும் ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’ எனும் எம்.ஜி.ஆர். பாடல்தான் வால்பாறை மக்களின் தேசிய கீதம். அதேபோல் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இருவரும்தான் இன்று வரை இம்மக்களின் ஆதர்ஷ ஜோடி. ’வாத்தியார், தலைவர், புரட்சித்தலைவர், எம்.சி.ஆர், எம்.சார்! அம்மா, புரட்சித்தலைவி, ஜெயாம்மா, செயலலிதா’ என்று அவரவரின் படிப்பறிவுக்கு ஏற்ப இரண்டு தலைவர்களையும் விளிப்பதும், கொண்டாடுவதும் வாடிக்கை. 

கடந்த முறை பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்கிய புது வேட்பாளரான மகேந்திரன் அபரிமிதமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வால்பாறை மக்களின் அமோக ஆதரவும் முக்கிய காரணம். இதற்கு நன்றிக்கடனால வால்பாறை மக்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை பெற்றுத் தந்தார் மகேந்திரன். 

இப்போது மீண்டும் மகேந்திரனே போட்டியிடும் நிலையில், வால்பாறையில் அ.தி.மு.க.வினர் மகேந்திரனுக்கான ஆதரவை தேடி அம்மக்களிடம் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சமீபத்தில் வேட்பாளர் மகேந்திரனை தேடி வந்து சந்தித்த வால்பாறை மக்கள் குழுவினரிடம் மகேந்திரன் வாக்கு கேட்க...

‘ஏனுங்க ரெட்ட எலையை எப்படிங்க நாங்க மறப்போம்? எங்க உசுர கூட மறப்போமுங்க, ஆனா எம்.சி.ஆர மறப்போமா? அம்மாள மறப்போமா?  என்னைக்கும் எங்க ஆதரவு அ.தி.மு.க.வுக்கு தானுங்க. முன்னாடியெல்லாம் வால்பாறையில ஆன, சிறுத்த தாக்கிடுச்சுன்னா உசுர காப்பாத்துற மேல் சிகிச்சைக்காக மலையிலயிருந்து கீழே இறங்கி கோயமுத்தூர் ஆஸ்பத்திரிக்கு பறப்போமுங்க. 

அப்போ ரோடு சிங்கிளா இருந்ததாலே வேகமா போக முடியாது, டிராஃபிக்ல சிக்கிக்குவோம். காலதாமதத்தாலேயே ஏகப்பட்ட உசுருங்க போயிருக்குது, சில  பேரோட உடல் உறுப்புகளை காப்பாத்த முடியாமலும் போயிருக்குது. ஆனா இப்போ உங்க புண்ணியத்துல பொள்ளாச்சியில இருந்து கோயமுத்தூருக்கு அருமையா, விசாலமா  ரோடு போடப்பட்ட பிறகு அவசர சிகிச்சைக்கும், சிக்கலான பேறு காலத்துக்கும் பொசுக்கு பொசுக்குன்னு கோயமுத்தூருக்கு போக முடியுதுங்க. 

இதனால உயிர் சேதாரங்கள் ரொம்பவே குறைஞ்சு போச்சுதுங்க. இவ்வளவு பெரிய நல்லதை செஞ்ச உங்களுக்கு இல்லாம வேற யாருக்குங்க நாங்க ஓட்டு போட முடியும்?” என்று கேட்க, நெகிழ்ந்துவிட்டாராம் மகேந்திரன். 
சொல்லை விட செயல் பெரிது!

click me!