
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை அடுத்து, நேற்று துவங்கப்பட்ட இணையதளத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் உறுப்பினர் ஆவதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிது.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும் தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார்.
முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார். நேற்று தமது இணையதளத்தை ரஜினிகாந்த தொடங்கினார். தமது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார். அதைதொடர்ந்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற
டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ரஜினிமன்றம் இணையதளம், செயலி அறிமுகத்தை தொடர்ந்து டிவிட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் இணையதளத்தை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், ரசிகர்களும், பொதுமக்களும் ஆர்வமாக இணையத் தொடங்கிவிட்டனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தை பயன்படுத்தினர். இதனால், ரஜினி ரசிகர் மன்ற இணையதள சேவை முடங்கியது. ஆனாலும், ரசிகர்கள் ஆர்வமாக, தங்களை பதிவு செய்து கொண்டனர். நேற்று இரவு 9 மணிக்குள் 50 லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். 4 மணியில் இருந்து 9 மணி வரை அதாவது 5 மணி நேரத்தில் இந்த அளவு உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
தொடர்ந்து போட்டி போட்டு கொண்டு ரசிகர்கள் உறுப்பினராவதால், மன்றத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.