சசிகலாவிடம் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்... சாட்டையை சுழற்றும் ஓபிஎஸ், இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jun 24, 2021, 12:36 PM IST
Highlights

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது அதிமுகவினரிடம் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 5 நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது அதிமுகவினரிடம் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த சம்மந்தமும் இல்லை என்றே ஓபிஎஸ், இபிஎஸ் கூறி வருகின்றனர். மாவட்டந்தோறும் அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 5 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுபாய் மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த ஏ. ராமகிருஷ்ணன்(மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சரவணன்( மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்) ஆர். சண்முகப்பிரியா (மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர்) நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணைச் செயலாளர்) டி. சுந்தரராஜ் (மாணவர் அணி இணைச்செயலாளர்) ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

click me!