ஆரம்பிச்சுட்டாங்க.. சிவசேனாவில் 45 எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவா இருக்காங்க: உத்தவ் தாக்கரேவை உசுப்பேற்றும் பாஜக எம்.பி.

By Selvanayagam PFirst Published Oct 29, 2019, 10:49 PM IST
Highlights

சிவசேனாவில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 45 பேர் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், பாஜக அமைக்கும் ஆட்சியில் பங்கெடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள் என்று பாஜக எம்.பி. பேசியது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சிவசேனா கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சியின் எம்எல்ஏக்களை சிதறச்செய்யும் விதத்தில் இந்த பேச்சை பாஜக எம்.பி. சஞ்சய் காக்கடே பேசியுள்ளார், இதனால் பாஜக, சிவசேனா இடையிலான உறவில் விரிசல்தான் உருவாகும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா தேர்தலில் சிவசேனா 56 இடங்களிலும், பாஜக கூட்டணி 105 இடங்களிலும் வென்றன. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த போதிலும் ஆட்சி அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஆட்சியில் சமபங்கு ஏதும் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்று பாஜக தரப்பில் முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டு, சுயேட்சை, சிறுகட்சிகள் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இதனால் மாராட்டிய மாநிலத்தில் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி அமையுமா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக பாஜக எம்பி. சஞ்சய் காக்கடே சிவசேனா எம்எல்ஏக்கள் குறித்துப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பாஜக எம்.பி. சஞ்சய் காக்கடே நேற்று பேட்டி அளிக்கையில், " மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை. பாஜக தலைமையில் அமைக்கும் ஆட்சியில் பங்கெடுக்க சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சிவசேனா கட்சியில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 45 பேர் பாஜகவுக்கு ஆதரவுக்கு அளிக்க என்னிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கவும் ஆதரவு தெரிவிப்பார்கள், தங்களை பாஜக தலைமையில் அமையும் ஆட்சியில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்கள் " எனத் தெரிவித்தார்

click me!