வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்குப் பாதுகாப்பு.. சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Apr 27, 2021, 11:57 AM IST
Highlights

காவலர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க சுகாதாரமான உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 34 காவலர்கள், 5 குடும்பத்தாரென மொத்தம் 39 பேர் தற்போது இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறும் விதமாக காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட  கோவிட் கேர் செண்டர் Phase-II மையத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 

அண்ணா பல்கலை கழக வளாகத்தில் மொத்தமுள்ள 420 படுக்கைகளில், 360 படுக்கைகள் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என மொத்தம் 38 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் இரவும், பகலும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 24 ஆம் தேதி முதல் இந்த வளாகம் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கென செயல்படுகிறது. 

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதுவரை 324 காவல்துறையினர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு கருதி இந்த வளாகத்தில் காவல் துறையினருக்கென கோவிட் கேர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுப் பயிற்சி அளிக்க வல்லுனர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காவலர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க சுகாதாரமான உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 34 காவலர்கள், 5 குடும்பத்தாரென மொத்தம் 39 பேர் தற்போது இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 17 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட காவலர்கள் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர். இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு அப்பிரச்சனை சீரானபின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி நடக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்படவுள்ளது. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினரும், இரண்டாம் அடுக்கில் சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இது தவிர்த்து வெளியில் கொண்டாட்டங்களை கண்காணிக்க கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் தெரிவித்தார். 
 

click me!