சூலூரில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை எதிர்க்கும் 4 கந்தசாமிகள்... பெயர்க் குழப்பம் ஏற்படுத்த அதிரடி போட்டி!

By Asianet TamilFirst Published May 3, 2019, 7:27 AM IST
Highlights

தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள், இடைத்தேர்தல்களில் இந்தப் பாணியை அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும். தற்போது நடைபெற உள்ள 4 இடைத்தேர்தல் முடிவுகளும் ஆளும் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் மிக முக்கியமானவை என்பதால், தேர்தலில் வெற்றி பெற இரு கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன.

சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை எதிர்த்து சுயேட்சையாக 4 கந்தசாமிகள் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் வேட்பாளர் பெயரில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக ஒரே பெயரைக் கொண்ட வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த உத்தியைப் பிரதான கட்சிகள் எல்லாமே செய்திருக்கின்றன. பெயர் குழப்பத்தில் வாக்குகள் கொஞ்சம் மாறிப்போகும் என்பது அரசியல் கட்சிகளின் நம்பிக்கை.


எல்லா தேர்தல்களிலும் இந்தப் பாணியை அரசியல் கட்சிகள் மேற்கொள்வதில்லை. தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள், இடைத்தேர்தல்களில் இந்தப் பாணியை அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும். தற்போது நடைபெற உள்ள 4 இடைத்தேர்தல் முடிவுகளும் ஆளும் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் மிக முக்கியமானவை என்பதால், தேர்தலில் வெற்றி பெற இரு கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன.
முக்கியமான இடைத்தேர்தலாக மாறிவிட்ட 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் களமிறக்கி விட்டுள்ளன. வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் போன்ற தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துவிட்ட நிலையில், சூலூர் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். திமுக சார்பில் பொங்கலூர் பழனிச்சாமி, அதிமுக சார்பில் கந்தசாமி, அமமுக சார்பில் சுகுமார் உள்பட 22 பேர் போட்டியிடுகிறார்கள்.


இதில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி பெயரில் மட்டும் 4 சுயேட்சைகள் போட்டியிடுகிறார்கள். 22 வேட்பாளர்களில் மொத்தம் 5 கந்தசாமிகள் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். வேட்பாளார் பெயரில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக கந்தசாமி பெயரில் 4 பேரை  களமிறக்கிவிட்டிருக்கிறார்கள். இதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - அமமுக என இரு கட்சிகளுமே முனைப்பு காட்டிவருகின்றன. அந்தத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரன் பெயரில் ஒரு சுயேட்சை வேட்பாளர் களமிறங்கி உள்ளார். 

click me!