தமிழக மருத்துவ கலந்தாய்வில் முறைகேடாக 34 தெலுங்கானா மாணவர்கள்..? உள்ளே எப்படி வந்தார்கள், திருமாவளவன் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 19, 2020, 7:26 AM IST
Highlights

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில்  இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம்பெற்றிருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: 

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில்  இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம்பெற்றிருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு  மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் 34 பேரையும் இனி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். 

தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவைக்  கருக்கும் விதமாகவே மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க முடியாது என மறுத்துவரும் பாஜக அரசு ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களித்து  இனிசெட் என்று தனியே அவற்றுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும். 

பாஜக அரசின் துரோகம் போதாதென்று இப்போது வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தரவரிசைப் பட்டியலில் தெலுங்கானா ரேங்க் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 34 பேர் இடம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. வெளி மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய எம்பிபிஎஸ் இடங்களைப் பிற மாநில மாணவர்களுக்கு ஏன் தாரை வார்த்துத் தரவேண்டும்? ஏற்கனவே மத்திய தொகுப்புக்கு 15% இடங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு மிச்சமிருப்பதிலும் பிற மாநில மாணவர்களைச் சேர அனுமதிப்பது நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வஞ்சகம் செய்வதாகாதா? 

மருத்துவப் படிப்பு சேர்க்கையில்  எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் நடக்காமல் தடுப்பதற்கு குடியிருப்புச் சான்றிதழ் கேட்பது மட்டுமின்றி, 6 ஆம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை தமிழ் நாட்டில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் எனத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறி அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!