ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுமா.? நீதிபதிகள் கிடுக்குபிடி கேள்வி. 24ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு.!

By T BalamurukanFirst Published Nov 18, 2020, 10:57 PM IST
Highlights

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் சட்ட வரைவு தயாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் சட்ட வரைவு தயாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடைவிதிக்கக் கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், பாஸ்கர் ஆகியோர் வாதிட்டனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடும் போது..., ''தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூடவில்லை என்பதால் அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தை அரசு அதிக முக்கியத்துவத்துடன் அணுகி வருகிறது. விரைவில் சட்ட வரைவு தயாரிக்கப்படும்'' என்றார்.

அப்போது நீதிபதிகள், ''ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிர் பலிகள் அதிகரித்து வருகின்றன. பிரபலமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் செய்கின்றனர். தமிழகத்தில் சினிமா நடிகர்களைப் பின்பற்றுவது அதிக அளவில் உள்ளது. எனவே, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கவும், அதற்கான சட்டத்தை நிறைவேற்றவும் எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டம் நிறைவேற்றப்படுமா? விதிகள் வகுக்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை நவ. 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

click me!