31 தொகுதிகளில் பதுங்கும் திமுக - அதிமுக... 6 தொகுதிகளில் அசால்ட் காட்டும் பாமக..!

By Thiraviaraj RMFirst Published Mar 17, 2019, 11:49 AM IST
Highlights

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக- திமுக நேரடியாக போட்டியிடுகின்றன. மீதமுள்ள தொகுதிகளில் இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் மோதுகின்றன.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக- திமுக நேரடியாக போட்டியிடுகின்றன. மீதமுள்ள தொகுதிகளில் இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் மோதுகின்றன.

திமுக கூட்டணி நேற்று முன் தினம் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்திருந்த நிலையில், இன்று அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் நேரடியாக மோதுகின்றன என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சிகளான திமுக- அதிமுக கட்சிகள் 39 தொகுதிகளில் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே நேருக்கு நேராக களம் காண்கிறன. அதன்படி தென்சென்னை- திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பொள்ளார்ர்சி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, நீலகிரி, சேலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அதிமுக  திருவள்ளூர், கிரிஷ்ணகிரி, ஆரணி, சிவகங்கை, தேனி ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிடுக்கிறது. தேமுதிக- திமுக இடையே வடசென்னை கள்ளக்குறிச்சி தொகுதிகளில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.  திமுக -பாமக கட்சிகள் 6 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. அதன் படி ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, அரக்கோணம், தருமபுரி, கடலூர், திண்டுக்கல் போட்டியிடுகின்றன. விழுப்புரத்தில் விசிக- பாமக நேரடியாக மோதுகிறது.  அதேபோல் பாஜக- காங்கிரஸ் கட்சிகள் சிவகங்கை, கன்னியாகுமரி தொகுதிகளில் நேருக்குநேர் பலம் காட்டுகின்றன. வேலூர் தொகுதியில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து திமுக போட்டியிடுகிறது.

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை எதிர்த்து ராமநாதபுரம் தொகுதியில் பாஜக பலப்பரீட்சை நடத்துகிறது. தஞ்சாவூரில் தமாகா கட்சி திமுகவுடன் மோதுகிறது. நாமக்கல்லில் கொங்கு மக்கள் தேசிய கட்சியை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலும் அதிமுக போட்டியிடுகிறது. பெரம்பலூரில் ஐஜேகே பாரிவேந்தரை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது. ஈரோட்ட்டில் அதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை எதிர்த்து அதிமுக பலப்பரீட்சை நடத்த உள்ளது.  

தென்காசி தொகுதியில் புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை எதிர்த்து திமுக போட்டியிடுகிறது. நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது.  காங்கிரஸ் தேமுதிக இடையே திருச்சி, விருதுநகரில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதன்படி 31 தொகுதிகளை கூட்டணிகளுடன் மோதவிட்டு அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் 8 இடங்களில் மோதுவது இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள கலக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுகவில் 7 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆறு தொகுதிகளில் திமுகவுடன் மோதுகிறது பாமக. இதன் மூலம் இரு பெரிய கட்சிகள் 8 தொகுதிகளில் மோதும் நிலையில் திமுகவை எதிர்த்து நேரடியாக மோதும் ஒரே கட்சியாக பாமக உள்ளது. 

click me!