நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு.. டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு..!

First Published Dec 5, 2017, 10:37 AM IST
Highlights
2g spectrum case judgement on december 21 said CBI court


நாட்டையே உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு வரும் 21-ம் தேதி வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து வழக்கின் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி செப்டம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினத்தில் அக்டோபர் 25-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி தெரிவித்தார்.

பின்னர் அக்டோபர் 25-ம் தேதி, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை சேர்க்கும் பணிகள் நடந்துகொண்டிருப்பதால் தீர்ப்பின் தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தீர்ப்பின்  தேதி வரும் நவம்பர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேர்த்து தீர ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதால் நீதிபதி ஷைனி ஓய்வின்றி அதிதீவிரமாக பணியாற்றுவதாக தகவல்கள் வந்தன.

ஆனால், நவம்பர் 7ம் தேதியன்று, தீர்ப்பின் தேதி டிசம்பர் 5(இன்று) அன்று அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி தெரிவித்துவிட்டார். இன்றையை தினம் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டனரா என கேட்ட நீதிபதி, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு வரும் 21-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வரும் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
 

click me!