
2 ஜி ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதம் மற்றும் மறுவாதம் முடிவடைந்த நிலையில் வரும் ஜுலை மாதம் தீர்ப்பு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் முறைகேடாக கைமாறிய விவகாரம் சி.பி.ஐ.,யின் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் டாடா நிறுவனத்தை புறந்தள்ளிவிட்டு, ஸ்வான் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதற் கான பிரதிபலனாகத்தான் கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் தரப் பட்டுள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
ஆனால் டாடா நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை செலுத்வில்லை என்பதால்தான் அவர்களது விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்ததாக ஆ.ராசா பதில் சொல்லியிருந்தார்.
இது தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையின்போது டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ , வழக்கறிஞர் குரோவருக்கும், ஆ.ராசாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இப்பிரச்சனையில் வேண்டுமென்றே, ஆ.ராசா தாமதம் செய்தார் என குரோவர் குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஆ.ராசா. பாக்கி வைத்துள்ள நிறுவனத்திற்கு கையெழுத்துப் போட்டிருந்தால், உள்நோக்கத்துடன், டாடாவுக்கு சலுகை காட்டுவதற்காக, உரிமம் வழங்கி விட்டார் ராசா எனவும் சிபிஐ குற்றம் சாட்டுமே என எதிர்வாதம் செய்தார்.
இரு தரப்பினரிடையே நடைபெற்ற இந்த கடுமையான வாதித்தில் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் சிபிஐ மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இரு தரப்பு வாத பிரதிவாதங்கள் ஏற்கனவே முடிவடைந்து ,கடைசி வாய்ப்பான, சுருக்கமான மறுவாதமும், இருதரப்புக்கும் முடிவடைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவு தரப்பின் வாதங்கள், 10 நாட்களுக்கு நடைபெறும் என்றும் கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூலையில், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.