A Raja 2G Appeal Case : 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதேபோல், மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.
இதையும் படிங்க: PMK Candidates: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு- 9 வேட்பாளர்கள் யார்.? - முழு விவரம் இதோ
டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்குகள் மீதான விசாரணையின் தீர்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஐ அம் வெயிட்டிங்! துப்பாக்கி பட பாணியில் அண்ணாமலையை சீண்டிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்!
இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், 2ஜி முறைகேடு புகார் வழக்கில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மக்களவை தேர்தலில் ஆ.ராசா நீலகிரி தொகுதியிலும், கனிமொழி ததூத்துக்குடி தொகுதியிலும் போட்டியிட உள்ள நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.