21 தொகுதி + ராஜ்யசபா சீட்..! தேமுதிகவின் புது அப்ரோச்..! மனம் மாறும் அதிமுக?

By Selva KathirFirst Published Mar 3, 2021, 10:08 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் தங்களுக்கு 21 தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் ஒன்றை ஒதுக்கினால் கூட்டணி உறுதி என்று புதிய கோரிக்கையுடன் தேமுதிக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் தங்களுக்கு 21 தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் ஒன்றை ஒதுக்கினால் கூட்டணி உறுதி என்று புதிய கோரிக்கையுடன் தேமுதிக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

கடந்த தேர்தல்களை போல் அல்லாமல் இந்த முறை கட்சிகளின் வாக்கு வங்கிகளுக்கு ஏற்ப மட்டுமே தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. சுனில் டீம் எடுத்த சர்வே அடிப்படையில் வாக்கு வங்கி வாரியாக கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியுடன் உள்ளது. அதிலும் பாமகவிற்கு வெறும் 23 தொகுதிகளை கொடுத்து கூட்டணியை உறுதி செய்தது எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய அரசியல் ராஜ தந்திரம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதே பாணியில் பாஜகவையும் கூட 21 தொகுதிகளுக்கு அதிமுக தரப்பு ஒப்புக் கொள்ள வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

பாஜகவை பொறுத்தவரை வாக்கு வங்கி என்பதையும் தாண்டி மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி என்கிற அடிப்படையில் அதிமுக அணுகுகிறது. தேர்தல் சமயத்தில் மத்திய அரசின் ஆதரவு தேவை என்பதால் அந்த கட்சிக்கு 21 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி முன்வந்துள்ளார். ஆனால் கடந்த 2011க்கு பிறகு தேமுதிக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் படு தோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சிக்காரர்களை தவிர பொதுமக்களில் ஒருவர் கூட தேமுதிகவிற்கு வாக்கு அளிக்க தயாராக இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சர்வேயில் தேமுதிகவை பொதுமக்களில் யாருமே தேர்வு செய்யவில்லை.

அதே சமயம் தேமுதிக தற்போது வரை கட்சி ரீதியாக கிராமங்கள் வரை இருப்பதையும் சுனில் டீம் புரிந்து வைத்துள்ளது. எனவே கட்சிக்காரர்கள், விஜயகாந்த் ரசிகர்களின் வாக்கு என ஒரு தொகுதிக்கு 2ஆயிரம் முதல் 3 ஆயிரம் வாக்குகள் வரை கிடைக்கும் என்று கணக்கு போட்டுள்ளனர். ஒரு சில தொகுதிகளில் இந்த வாக்கு வங்கி 10ஆயிரம் வரை உள்ளது. மற்றபடி பொதுமக்கள் மத்தியில் தேமுதிகவிற்கு துளியளவும் வரவேற்பு இல்லை என்பதை எடப்பாடியிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். எனவே தான் அந்த கட்சிக்கு வெறும் 11 தொகுதிகள் என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டி வருகிறார்.

இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் இந்த 11 தொகுதிகளை தாண்டி அதிமுக தரப்பு வரவில்லை. இந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டுடன் 21 தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று தேமுதிக கோரிக்கை வைத்துள்ளது. ராஜ்யசபா சீட் கோரிக்கையை ஏற்பதில் தற்போது அதிமுகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 21 தொகுதிகள் என்பதை குறைத்துக் கொள்ளுமாறு தேமுதிக தரப்பிற்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை அடுத்து இது குறித்து தற்போது தேமுதிக ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளது.

எனவே ஒரு ராஜ்யசபா சீட்டுடன் 11 முதல் 14 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக முன்வரும் என்கிறார்கள். கூட்டணிக்கு வேறு வாய்ப்புகள் இல்லாத நிலையில் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலேயே தேமுதிக உள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக ஒதுக்கப்படும் தொகுதிகள் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ப தற்போதே பேச்சுவார்த்தையில் தேமுதிக கவனம் செலுத்தும் என்கிறார்கள்.

click me!