2024 நாடாளுமன்ற தேர்தல்.. டெல்லி விரையும் மு.க.ஸ்டாலின்..! பி.கே.வின் நெக்ஸ்ட் டார்கெட்..!

By Selva KathirFirst Published Jul 17, 2021, 11:21 AM IST
Highlights

தமிழகம், மராட்டியம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஆந்திரா, டெல்லி போன்ற முக்கிய மாநிலங்களில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து மோடிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்கும் முயற்சி தான் 2024ல் பிரசாந்த் கிஷோரின் டார்கெட் என்கிறார்கள். 

வரும் 18ந் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19ந் தேதி அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டாலும் அவரின் டெல்லி திட்டமே வேறு என்கிறார்கள்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அடுத்தடுத்து இரண்டு முறை சந்தித்து பேசினார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். தொடர்ந்து அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியையும் அவர் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போதைய சூழலில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார். மேற்கு வங்கம், தமிழகம் சட்டப்பேரவை தேர்தலோடு இனி மாநிலங்களில் பணியாற்றுவதில்லை என்று அவர் முடிவெடுத்திருந்தார்.

இதற்கு காரணம் தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் திட்டம் தான் என்கிறார்கள். அதன்படி தற்போது வரும் 2024ம் ஆண்டு தேர்தலுக்கான பணிகளை தற்போதே பிரசாந்த் கிஷோர் தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். தற்போதைய சூழலில் இந்தியாவில் பாஜகவிற்கு இணையான தேசிய கட்சி என்று கூறும் அளவிற்கு காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் கட்சியால் தனியாக மோடியை வீழ்த்த முடியாது. கடந்த தேர்தலில் ராகுல் காந்தி கடுமையாக உழைத்தும் கூட பிரதான எதிர்கட்சியாக கூட வர முடியாத நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது. இதனால் பாஜகவிற்கு எதிராக மாநில வாரியாக அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்றோர் பிரசாந்த் கிஷோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் முதலமைச்சர் பதவியில் நீடிக்க அல்லது தேர்வு செய்யப்பட பிரசாந்த் கிஷோர் அவரது டீமுடன் வேலை பார்த்துள்ளார். இவர்கள் தவிர பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்காக தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். இப்படி கிட்டத்தட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் தனக்கு உள்ள பழக்கத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் முடிவில் அவர் இருப்பதாக சொல்கிறார்கள்.

இதனிடையே மராட்டிய மாநிலத்தில் ஏற்கனவே சரத்பவார் பாஜகவிற்கு எதிரான அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். அங்கு சிவசேனா தலைமையில் ஆட்சி நடைபெற்றாலும் அது தொடர சரத்பவார் தான் முக்கிய பங்காற்றி வருகிறார். இப்படி, தமிழகம், மராட்டியம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஆந்திரா, டெல்லி போன்ற முக்கிய மாநிலங்களில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து மோடிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்கும் முயற்சி தான் 2024ல் பிரசாந்த் கிஷோரின் டார்கெட் என்கிறார்கள். இது பற்றி ஆலோசனை நடத்த வரும் ஞாயிறன்று டெல்லியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பிரசாந்த் கிஷோர் தன்னுடன் நெருக்கமாக உள்ள முதலமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து ஆலோசிக்கும் முடிவில் உள்ளதாக கூறுகிறார்கள்.

இதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக சொல்லப்படுகிறது. அப்படியே மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரையும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே தற்போதைய சூழலில் பாஜகவிற்கு எதிராக மிகத் தீவிர அரசியல் செய்பவர்கள். எனவே அவர்கள் இருவரில் ஒருவரை முன்னிலைப்படுத்தி மோடிக்கு எதிரான அணியை கட்டமைக்கவும் தேர்தல் நேரத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்படவும் திட்டங்கள் டெல்லியில் தீட்டப்படலாம் என்கிறார்கள்.

click me!