மாரியப்பனுக்கு 2 கோடி.. போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு அள்ளி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 4:06 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் 2 கோடி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களை நல்லமுறையில் அரசு ஊக்குவிக்கிறது. வீரர்கள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்  போட்டிகள், உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கும் மற்றும் பயிற்சியாளர்கள் என 18 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக 3.98 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி வீரர்-வீராங்கனைகளை கவுரவித்தார். எப்போதும் இல்லாத அளவிற்கு டோக்கியோவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிக அளவில் பதக்கங்களை வென்றனர். 

குறிப்பாக தமிழக வீரர்கள் அதிக அளவிலான எண்ணிக்கையில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அதே போல இன்னும் ஏராளமான வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக திறமையை வெளிபடுத்தினர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தது, அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை அழைத்து அவர்களுக்கு காசோலைகளை வழங்கி கவுரவித்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழக முதல்வர் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கத்தை வென்ற வீரர் வீராங்கனைகள் 18 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கினார். குறிப்பாக பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடியை ஊக்கத்தொகையாக முதல்வர் வழங்கியுள்ளார். பிற மாநிலங்களுக்கு விளையாட்டை ஊக்குவிப்பதில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது என்றார். அடுத்த ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து 75 வீரர்களாவது பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். அதேபோல் தமிழக வீரர்கள் வெளிநாடு சென்று பயிற்சி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 2 கோடி காசோலையை பெற்ற மாரியப்பன் கூறியதாவது,  தமிழக முதலமைச்சர் 2 கோடி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களை நல்லமுறையில் அரசு ஊக்குவிக்கிறது. வீரர்கள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமைசேர்க்க வேண்டும் என்றார். 

அவரைத் தொடர்ந்து பேசிய சதுரங்க விளையாட்டு ஜாம்பவான், விசுவநாதன் ஆனந்த், இந்த உதவி தமிழக விளையாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும். இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டு வீரர்கள், அதிக அளவில் உருவாவார்கள். தமிழக அரசின் இது போன்ற ஊக்கங்கள் அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்க வாய்ப்பாக அமையும் எனக் கூறினார். 
 

click me!