16 crore Vaccine:16 கோடி ஊசி என்பது வதந்தி.. மறுத்த மா.சு..! குழந்தைக்கு ஊசி போட்டாச்சு அன்சாரி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2021, 11:47 AM IST
Highlights

ஊசிப் போட்ட பிறகு குழந்தை நலமுடன் இருப்பதாகவும், 4 மாதங்கள் இங்கு தொடர்ந்து தங்கியிருந்து கிசிச்சை பெற வேண்டியுள்ளதாகவும் கூறினர். குரலில் பெரும் மகிழ்ச்சி தெரிந்தது. இப்போது ஆனந்தக் கண்ணீரில் அந்த பெற்றோர்கள் திளைக்கிறார்கள். 

முதுகு தண்டுவட தசைநார்த் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பாரதிக்கு 16 கோடி ரூபாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது என மனித நேய ஜனநாயக கட்சித் பொதுச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

தஞ்சாவூரை சேர்ந்த இரு வயதே ஆன குழந்தை பாரதி தமிழக மக்களிடம் சமீப காலமாக பிரபலமானவர். ஒரு வித வினோத நோயால் பாதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு, 16 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்க தயாரிப்பிலான தடுப்பூசி ஒன்றை செலுத்த வேண்டும் என பெங்களுரில் உள்ள ஒரு மருத்துவமனை பரிந்துரைத்தது. ஒரு ஊசியின் விலை 16 கோடியா? அப்படி ஒரு ஊசி இருக்கிறதா? இது உண்மையா? என்ற கேள்விகள் எழுந்தன. உண்மையை உணர்ந்தவர்கள் உதவிட துணிந்தனர். தஞ்சையில் தன்னார்வ தொண்டர்கள்  அக்குழந்தைக்கு நிதி உதவி கிடைக்க திட்டம் வகுத்து களமிறங்கிட முன்வந்தனர். வலைதளங்களில் பேராதரவு பெருகி உதவிகள் குவிந்தன.அந்த உதவித் தொகைகள் வெளிப்படைத் தன்மையோடு முறைப்படுத்தப்பட்டதால் அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது.

நல்லெண்ணம் கொண்ட தொழிலதிபர்களின் கரங்கள் நீண்டன. நிறுவனங்கள், அறக்கட்டளைகள், தொண்டு அமைப்புகள் உதவின. அலுவலக பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், சிறுகடை உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சாமானியர்கள், தொழிலாளர்கள் என பலரும் மனமாற உதவினர். இயன்ற அளவில் அவரவர் சக்திகேற்ப பங்களிப்புகள் பெருகியது. 14 கோடியை எட்டிய நிலையில், மீதி இரண்டு கோடியை திரட்டுவதில் திணறல் ஏற்பட்டது. அக்டோபர் மாதம் அது.அப்போது மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீரும், சமூக ஆர்வலர் கிரின் சிட்டி- நவீனும் அந்த பெற்றோர்களை என்னிடம் அழைத்து வந்தனர்.

தஞ்சையில் சந்தித்துக் கொண்டோம்.பிறகு இச்செய்தியையும், மனிதாபிமானம் மிகுந்த அதன் முக்கியத்துவத்தையும் எனது முகநூலில் பதிவிட்டு, இக்குழந்தையின் உயிர் காக்க கோரிக்கை விடுத்தேன்.தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசலில்  மஜக-வினருடன் இணைந்து பொது நிதி திரட்டலிலும் பங்கேற்றேன்.பாரதியின் பெற்றோர்களுடன் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து, தமிழக முதல்வரும், அரசும் இக்குழந்தைக்கு உதவ வேண்டும் என்றும், பொதுமக்களும் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். தமிழக மக்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் என பலரும் துடித்துப் போய், ஈர உணர்வுடன் தங்கள் உதவிகளை அனுப்பினர்.அடுத்த இரு வாரங்களில் நிறைவாக 16 கோடி நிதி சேர்ந்தது. கடந்த வாரம் அந்த பெற்றோர்கள் இதற்காக உதவிய அனைவருக்கும், களப்பணியாற்றிய மனித நேயர்களுக்கும் நன்றி கூறினர்.

என்னை அலைபேசியில் தொடர்புக் கொண்டு கலங்கிய குரலில் நன்றி கூறினர். இதோ குழந்தை பாரதி சிரிக்கிறாள். ஒரு செடி பூப்பூக்கிறது! ஆம். அமெரிக்காவிலிருந்து நேற்று காலை பெங்களுருக்கு அந்த ஊசி கொண்டு வரப்பட்டது. (நேற்று)வெள்ளிக் கிழமை காலை அன்பு குழந்தை பாரதிக்கு அந்த ஊசி போடப்பட்டிருக்கிறது. இன்று மதியம் பெங்களூருவில் குழந்தை பாரதியுடன்  அருகில் இருந்து கவனித்து வரும் பெற்றோர்களிடம் அலைபேசியில் நலம் விசாரித்தேன். ஊசிப் போட்ட பிறகு குழந்தை நலமுடன் இருப்பதாகவும், 4 மாதங்கள் இங்கு தொடர்ந்து தங்கியிருந்து கிசிச்சை பெற வேண்டியுள்ளதாகவும் கூறினர். குரலில் பெரும் மகிழ்ச்சி தெரிந்தது. இப்போது ஆனந்தக் கண்ணீரில் அந்த பெற்றோர்கள் திளைக்கிறார்கள். 

உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறார்கள்.சில சேவைகளை இறைவனின் பேரருளை எதிர்பார்த்து செய்வதுண்டு. அத்தகைய ஒன்றில் ஈடுபட்ட மன நிறைவு எனக்கு இருக்கிறது.கடைசிக் கட்டத்தில் மஜக-வினர் வலைதளங்களிலும், தஞ்சை மாவட்டத்தில் களத்திலும் செய்த உதவிகளும், மற்ற பலர் செய்த முயற்சிகளும் அவர்களது துயரத்தை போக்கியிருக்கிறது. பள்ளத்தாக்கில் வீசும் மெல்லிய காற்றில் காட்டுப் பூக்கள்  மலர்வதைப் போல அக்குடும்பத்தில் இனி மகிழ்ச்சி பெருகட்டும். குழந்தை பாரதிக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துவோம். பிரார்த்திப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

குறிப்பு: ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதுதொடர்பாக செய்தியாளர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், நார்ச் சிதைவு நோய்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அது தீர்க்கப்பட்டதில்லை. 16 கோடி ரூபாய்க்கு எங்குமே தடுப்பூசி இல்லை.. மருந்து இருப்பதாக சொல்வது வதந்தியான செய்தி என மறுத்திருந்தார். இந்நிலையில்தான் பாதிக்கப்பட்ட குழந்தை பாரதிக்கு அந்த குறிப்பிட்ட 16 கோடி ரூபாய் தடுப்பூசி அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு செலுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் இது குறித்து தீர விசாரிக்காமல் அதை வதந்தி என மறுத்து பேசியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக இதேபோன்ற நோயாள் பாதிக்கப்பட்டிருந்த நமக்கல் மாவட்டத்தைசே சேர்ந்த சிறுமி மித்ராவுக்கு 16 கோடி ரூபாய் நிதி வழங்க பலரும் முன்வர வேண்டும் என்றும், அந்த நிதிக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், பின்னர் தமிழக அரசை எடுத்த முயற்சியால் சிறுமி மித்ராவுக்கு சிகிச்சை நடைபெற்றது என்ற தகவலையும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஏற்கனவே சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

 

 

click me!