
மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘தமிழகம் ஒற்றுமையான மாநிலமாக உள்ளது. ஒரு சிலர் தங்களது கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை பரப்புகிறோம் என்ற பெயரில் கருத்துக்களைக் கூறுவதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் விஷமத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறை விதை தூவலை ஒரு போதும் தமிழக அரசு அனுமதிக்காது. திமுக ஆட்சியில் தமிழகம் காஷ்மீராக உருவாகும் என விஷம கருத்தை மாரிதாஸ் பரப்பியுள்ளார்.
487 ஆக்கிரமிப்பாளர்கள் மீது இந்து சமய அறநிலையத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1587 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் வாடகை வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 20கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய போது அர்ச்சகர்கள், அனைத்து கோயில்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம் என்ற அறிவிப்பை அடுத்து இன்று சென்னை மற்றும் திருவண்ணாமலையில் இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளது’ என்று கூறினார்.