Deepa : அம்மா பொருள் எதுவுமே இல்லை.. பகீர் கிளப்பிய ஜெ.தீபா.. போயஸ் கார்டன் புது சர்ச்சை..

By Raghupati RFirst Published Dec 11, 2021, 7:41 AM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் பொருட்கள் எதுவும் இல்லை என்று பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார் ஜெ.தீபா.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து சாவியை பெறுவதற்காக தீபா, தீபக் இருவரும் நேற்று  சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வீட்டுச்சாவியை கலெக்டர் விஜயராணி அவர்களிடம் வழங்கினார். இதுபற்றி கலெக்டர் விஜயராணி கூறியபோது, ‘நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து இருந்தனர். 

இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் போயஸ் இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது’ என்றார். அப்போது வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தீபா, தீபக் மற்றும் தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்டோர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.  அதிகாரிகள் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்கள் குறித்து தீபா, தீபக்குக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

பின்னர் வீட்டின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தீபா, போயஸ் கார்டன் இல்லம் யாரும் வசிக்க முடியாத அளவிற்கு பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடப்பதாக கூறினார். ‘அத்தை பயன்படுத்திய பொருட்கள் எதுவும் இங்கு இல்லை. அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீட்டை சீரமைக்க வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும்.  

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இந்த விசாரணையை தமிழக அரசு முறையாக நடத்த வேண்டும்’ என்றும் தீபா கேட்டுக்கொண்டார். பின்னர், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தீபா அளித்த பேட்டியில், ‘நீதிமன்ற தீர்ப்புக்கு பின், சாவியை எங்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. எங்களுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்தன. இப்போது நான் அவருக்கு ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

click me!