DMK | தமிழக ஆளுநரின் நடவடிக்கை.. அமைச்சர் பொன்முடி சமாளிப்பு.. அன்று கொந்தளித்த திமுக இன்று கப்சிப்?

By Asianet TamilFirst Published Dec 10, 2021, 10:11 PM IST
Highlights

“மாணவர்கள் மூன்றாவது மொழியைப் படிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மூன்றாவது மொழி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாய பாடமாக இருக்க கூடாது.”

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகள் வரவர மாறும் என்று தமிழக உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாவட்டங்களில் ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த  திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாவட்டங்களுக்கு ஆளுநர் சென்றபோது திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால்,
புதிய ஆளுநராகப் பதவியேற்ற ஆர்.என்.ரவி. கடந்த அக்டோபர் மாதம் தமிழக துணைவேந்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆனால், திமுக தரப்பில் எந்த எதிர்ப்பும் காட்டப்படவில்லை. திமுகவில் சிறு சிறு சலசலப்புக்கூட எழவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது கொந்தளித்த திமுக ஆளுங்கட்சியானதும் அமைதியானது.

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநரும் வேந்தருமான ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்த விழாவில் புதிய தேசியக் கல்வி கொள்கையால் ஏற்படப்போகும் நன்மைகள் பற்றி பட்டியலிட்டுப் பேசினார் ஆர்.என். ரவி. மேலும் திருச்சியில் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார். திருச்சியில்தான் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் நேற்று இருந்தார். ஆளுநருடன் சேர்ந்துதான் பொன்முடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். 

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பொன்முடி பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாணவர்கள் மூன்றாவது மொழியைப் படிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மூன்றாவது மொழி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாய பாடமாக இருக்க கூடாது.” என்று தெரிவித்தார். அப்போது, ‘ஆளுநர் திருச்சியில் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை மற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன்முடி, “ஆளுநர் கல்வித்துறை குறித்து கேட்டுள்ளார், அவ்வளவுதான். அவரின் நடவடிக்கை வர வர மாறும்” என்று அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

click me!