ராகுல் பின்னால் அணிவகுத்த 15 அரசியல் கட்சிகள்..! மோடிக்கு எதிராக புதிய வியூகம்..!

By Selva KathirFirst Published Aug 5, 2021, 11:09 AM IST
Highlights

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசின் முக்கிய கூட்டணிக்கட்சிகள் மட்டும் அல்லாமல் காங்கிரசில் சீனியர் தலைவர்களே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயங்கினர். இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கவில்லை. 

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த ராகுல் காந்தி தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்களே உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசின் முக்கிய கூட்டணிக்கட்சிகள் மட்டும் அல்லாமல் காங்கிரசில் சீனியர் தலைவர்களே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயங்கினர். இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கவில்லை. ஆனால் தமிழகம் மற்றும் கேரளத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இந்த இரண்டு மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது.

அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமான தலைவராக இருக்க கூடிய மோடிக்கு நிகராக எதிர்கட்சியில் ஒரு தலைவர் இல்லாததே கடந்த தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெற முக்கிய காரணமாக கூறப்பட்டது. அதே போல் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருந்தால் மோடியை வீழ்த்தியிருக்கலாம் என்றும் பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் காங்கிரசை பொறுத்தவரை தற்போதைய சூழலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முக்கிய நிர்வாகிகள், சீனியர் தலைவர்கள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கூட்டணி கட்சிகள் என்று வரும் போது தான் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரசில் சலசலப்பு ஏற்படுகிறது. ஆனால் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள திமுக கடந்த முறையே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்று வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தது. அதே சமயம் காங்கிரசுடன் கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் போன்றவை காங்கிரஸ் தலைமையை விரும்பாமல் இருந்தன. அதே சமயம் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரசுடன் நீண்ட காலமாக கூட்டணியில் உள்ள லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளிப்படையாகவே உள்ளது.

இதே போல் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தற்போது இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மோடியை எதிர்க்க வேண்டும் என்றால் வலுவான கூட்டணி மற்றும் அகில இந்திய அளவில் அறியப்பட்ட ஒரு தலைவர் தேவை என்பதை இக்கட்சிகள் புரிந்து வைத்துள்ளன. இதே போல் மேற்கு வங்கத்தில் மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தலைமையை ஏற்க மம்தாவும் தயாராகிவிடுவார் என்கிறார்கள். இந்த நிலையில் தான் டெல்லியில் எதிர்கட்சி தலைவர்களுக்கு ராகுல் காந்தி காலை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது என்கிற ஆலோசனையுடன் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற காங்கிரசின் கூட்டணி கட்சிகளோடு சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டன. இதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிரான வலுவான கூட்டணிக்கான விதையை ராகுல் காந்தி டெல்லியில் விதைத்திருப்பதாக கருதப்படுகிறது.

click me!