12 பச்சிளம் குழந்தைகள் உயிர் போராட்டம். போலீயோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர். மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Feb 2, 2021, 12:28 PM IST
Highlights

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தின் கப்சிகோபரி  கிராமத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சனிடைசர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

நாடு முழுவதும்  கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிராவில் சுகாதார பணியாளர்களின் கவனக்குறைவால் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சனிடைசர் வழங்கப்பட்டதால் 12 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது, நாடு முழுவதும் மூன்று நாட்கள் இந்த முகாம் நடைபெற்றது. இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் எந்த போலியோ பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 13 பேர் பாதிக்கப்பட்டதே கடைசி ஆகும். ஆனால் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் போலியோ பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து அதற்கான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக மகாராஷ்டிர மாநிலத்தில் 12 குழந்தைகளுக்கு சனிடைசர் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தின் கப்சிகோபரி  கிராமத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சனிடைசர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது, சானிடைசர் சாப்பிட்ட அனைத்து குழந்தைகளும் 5 வயதுக்குட்பட்டவர்கள்,  சானிடைசர் கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளுக்கும் வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கில் பன்போரா ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஆஷா தொழிலாளி உள்ளிட்டோர் மீது நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் கிஷோர் திவாரி சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப்பை  சந்தித்து கவனக்குறைவாக நடந்து கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகளுக்கு மீண்டும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள் கிர்மா கெடம், யோகாஷ்ரீ கெடம், தனுஜ் கெடம், ஹர்ஷ் மெஷ்ரம், வேதாந்தா மெஷ்ரம், ராதிகா மெஷ்ரம், பிராச்சி மெஷ்ரம், மஹி மெஷ்ரம், நிஷா மெஷ்ரம், ஆஸ்தா மெஷ்ரம் மற்றும் பாவனா ஆர்கே.ஆகும். ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதா இல்லையா? என கேள்வியை மக்கள் முன்வைத்துள்ளனர். இது குறித்து  ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா பஞ்சால் கூறுகையில், 'இது மிகப்பெரிய அலட்சியபோக்கை காட்டுகிறது.. போலியோ தடுப்பூசி பாட்டில்கள் வைரஸ் மானிட்டருடன் சதுரங்களால் ஆனவை. அவர்களுக்கு பிரத்யேக நிறம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த அலட்சியம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விசாரிக்கப்படும். ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதா இல்லையா என்பதையும் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!