எடப்பாடி கொடுத்த இன்ப அதிர்ச்சி... அரசு ஊழியர்கள் செம ஹாப்பி..!

By Thiraviaraj RMFirst Published Feb 2, 2021, 12:20 PM IST
Highlights

வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் ஏறக்குறைய மூன்று நான்கு மாதங்கள் அரசுக்கு வரி வருவாய் என்பதை இல்லாமல் போய்விட்டது. 

அரசு நிர்வாக எந்திரம் சீராக இயங்க வேண்டும் என்பதில் எப்போதுமே தீவிர கவனம் செலுத்தி வருபவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதை மனதில் கொண்டு அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கொரோனா முழு முடக்கத்தினால் தொழில்கள், வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் ஏறக்குறைய மூன்று நான்கு மாதங்கள் அரசுக்கு வரி வருவாய் என்பதை இல்லாமல் போய்விட்டது. அதே சமயம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் அரசு மேற்கொண்டதில்  கஜானா வெகுவாகக் குறைந்தது.
 
இதே பாதிப்பை எதிர்கொண்ட தனியார் நிறுவனங்கள், அதிரடியாக ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்புகளைச் செய்தன. தனியார் நிறுவனங்கள்தான் இதைச் செய்தன என்றால் கேரளா உள்ளிட்ட வேறு பல மாநில அரசுகளும்,  ஊழியர்களுக்கான சம்பளத்தில் பிடித்தம் செய்தன. தமிழகத்திலும் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குரல்கள் எழுந்தன. ஆனால், முதல்வர் எடப்பாடி அதை கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தில் எவ்வித பிடித்தமும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாது அடுத்து வந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு போனசும் கொடுத்தது தமிழல அரசு. 

எடப்பாடியின் இந்த வாஞ்சையான அணுகுமுறையால் அரசு ஊழியர்கள் உண்மையிலேயே நெகிழ்ந்துதான் போனார்கள். இந்த நிலையில், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள், 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் மக்கள் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் முதல்வரின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பினர். இருந்தபோதிலும், அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்நிலையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று ’மறப்போம்; மன்னிப்போம்’என்ற அடிப்படையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு கைவிடுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடியின் இந்த அறிவிப்பு அவர்களை ஆனந்த கூத்தாட வைத்துள்ளது. இது தொடர்பாக மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ‘’அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எப்போதுமே அதிமுக அரசுக்கு எதிரான எண்ணம் உண்டு. அதிமுக ஆட்சியை அவர்கள் எப்போதுமே தங்களுக்கு விரோதமானதாகவே பார்ப்பார்கள். ஆனால், அது தவறான புரிதல் என்பதை கொரோனா காலம் அவர்களுக்கு உணர்த்தியது. இப்போது ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து என்ற அறிவிப்பு மூலம், எங்கள் மீது இந்த அரசுக்கு இருக்கும் பரிவையும் பாசத்தையும் புரிந்து கொண்டோம். முதல்வரின் வேண்டுகோளின்படி, அரசு ஊழியர்கள் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணியாற்றுவார்கள். அதேபோன்று ஆசிரியர்களும் தங்களது கல்விப்பணியை சிறப்பாக தொடர்வார்கள்’’ என்கின்றனர்.

click me!