
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக எந்த முடிவும் எடுக்காததால் ஆளுநர் உரையை புறக்கணித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையை தொடங்குவதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் பயன்பெற்றுள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால், அது தமிழக மக்களுக்கு மத்திய அரசு அளித்த லாலிபாப் எனக்கூறியிருந்தேன். 2015ம் ஆண்டு, மத்திய பட்ஜெட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 2019ல், மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால், 2021 ம் ஆண்டு ஆகியும் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கப்படவில்லை. இதனால், தான் மத்திய பட்ஜெட் மூலம் தமிழக மக்களுக்கு அளித்த லாலிபாப் என விமர்சனம் செய்தேன். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளனர். ஆளுநர் பேசும் போது, அமருங்கள் இது கடைசி பட்ஜெட் என தெரிவித்தார். இது தான் உண்மை. அதனை வரவேற்கிறோம். அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்.
கடந்த டிசம்பர் 22ம் தேதி ஆளுநரிடம் அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவின் ஊழலுக்கு ஆளுநர் துணைபோகிறார். ராஜூவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை என்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. இதனால் தான் ஆளுநர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.