
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே சாலையில் நடந்த சண்டையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்துவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயிரம் ரூபாய் மட்டும் அபராதம் விதித்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது, காங்கிரஸ் தலைமையிலான, பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவருமான, நவ்ஜோத் சிங் சித்து, கடந்த, 1988-ல், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சாலையில் குர்னம் சிங் என்பவருடன் சண்டை போட்டார். அவரது தலையில் நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்; இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், சித்துவை விடுவித்தது. இருப்பினும், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டு, சித்துவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், சித்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், செலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த மாதம் 14-ம் தேதிவிசாரணைக்கு வந்தது.
அப்போது, பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை,'' என்றார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்ததையடுத்து, நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.
இதில், சித்துவுக்கு அபராதம் மட்டும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம், 30 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், சிறை தண்டனையில் இருந்து சித்து தப்பினார். வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது.