55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலை மறுப்பு. டாஸ்மாக்கில் தடைபோட தயாரா.? அரசுக்கு சரமாரி கேள்வி.

Published : Apr 27, 2021, 10:47 AM IST
55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலை மறுப்பு. டாஸ்மாக்கில் தடைபோட தயாரா.?  அரசுக்கு சரமாரி கேள்வி.

சுருக்கம்

100 நாள் வேலை வழங்குவதை தவிர்க்க கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர். இதை நம்பி வாழும் அப்படிப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்துக்கு 100 நாள் வேலை சட்டப்படி, வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கு உத்தரவிடாமல் தவிர்த்திருப்பது கண்டனத்திற்குரியது.  

வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லாமல் கொரோனாவை காரணம் காட்டி 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலையை மறுக்கும் வகையிலான உத்தரவை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்  வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கம் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: 

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் தொழிலாளர்களை கொரோனா காலத்தில் பாதுகாக்கும் நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டு மாநில ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் டாக்டர் கே.எஸ் பழனிச்சாமி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 19-4-2021 தேதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வறுமைக்கு தள்ளப்படுவர்: 

கிராமப்புற ஏழைகளின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த 100 நாள் வேலை உறுதி திட்டம் கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் எவ்வாறெல்லாம் உதவி செய்துள்ளது என்பதை அக்கடிதத்தில் ஆரம்பத்தில் பட்டியலிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர். தற்போது நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக கூறி 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலை வழங்குவதை தவிர்க்க கூறி உத்தரவிட்டுள்ளது பாரபட்சமானது. அந்த பிரிவினரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து ஏழைகளுக்கும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தும். வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் வறுமைக்கு தள்ளப்படுவர்.

டாஸ்மாக்கில் தடைபோட தயாரா: ?

55 வயதுக்கு மேற்பட்டோரை உண்மையிலேயே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு அக்கறை கொண்டுள்ளது எனில், டாஸ்மாக் மதுபான கடைக்கு 55 வயதுக்கு மேற்பட்டோர் வரக்கூடாது, அவர்களுக்கு மது வழங்கக் கூடாது என உத்தரவு போட அரசு தயாரா என எமது சங்கம் கேட்க விரும்புகிறது.

உத்தரவை திரும்பப்பெற உத்தரவிடுக :

100 நாள் வேலை வழங்குவதை தவிர்க்க கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர். இதை நம்பி வாழும் அப்படிப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்துக்கு 100 நாள் வேலை சட்டப்படி, வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கு உத்தரவிடாமல் தவிர்த்திருப்பது கண்டனத்திற்குரியது. எனவே ஊரக வளர்ச்சித்துறை ஆணையரின் இத்தகைய சட்டவிரோத உத்தரவை திரும்பப் பெறவும், 55 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்ந்து 100 நாள் வேலை பெற தலைமைச்செயலாளர் உத்தர விடவும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி கோருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!