துறைமுக பொறுப்புக் கழகத்துக்குச் சொந்தமான நிரந்தர முதலீட்டில் 100 கோடி மோசடி. 18 பேர் மீது குற்றப்பத்திரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 3, 2021, 4:21 PM IST
Highlights

அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து பண மோசடியில் ஈடுபட்ட 18 பேரை கண்டறிந்து அதில் 12 பேரை இதுவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. துறைமுக இயக்குனர் என நாடகமாடிய கணேஷ் நடராஜன் மற்றும் தரகர் மணிமொழி, செல்வகுமார், ஜாகிர் ஹுசைன், விஜய் ஹரால்ட், சியாது, அஃப்சார் உட்பட 12 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்து சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்துக்குச் சொந்தமான நிரந்தர முதலீட்டில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த விவகாரத்தில் வங்கி மேலாளர் உட்பட 18 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மூலம் கோயம்பேடில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் 500 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. இது நடந்து மூன்று நாட்களுக்குப் பின் கணேஷ் நடராஜன் என்பவர் இந்தியன் வங்கி கோயம்பேடு கிளையில் துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணை இயக்குநர் எனக்கூறி நிரந்தர வைப்புக் கணக்கில் உள்ள பணத்தில் 100 கோடி ரூபாயை இருவேறு நடப்புக் கணக்குகளில் 50 கோடி ரூபாய் வீதம் மாற்றக்கோரி சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் பரிந்துரைக் கடிதம், அனுமதிச் சான்று ஆகியவற்றை போலியாக தயார் செய்து அளித்தார். 

பின்னர் துறைமுக பொறுப்புக் கழகத்தின் பெயரில் இரு நடப்புக் கணக்குகளை இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜாவின் உதவியுடன் துவங்கிய கணேஷ் நடராஜன் தரகரான மணிமொழியுடன் சேர்ந்து ஒரு நடப்புக் கணக்கில் மாற்றப்பட்ட 50 கோடி ரூபாயை 28 வங்கிக் கணக்குகளில் தொடர்ந்து மாற்றி வந்துள்ளனர். இந்த தொடர் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த துறைமுக அதிகாரிகள் மற்றும் இந்தியன் வங்கி அதிகாரிகள் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்போது மீண்டும் செல்வகுமார் என்பவருடன் பணத்தை மாற்ற வந்த மணிமொழியை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவ்வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கணேஷ் நடராஜன், மணிமொழி மற்றும் சேர்மதி ராஜா ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர்.

இந்த விவகாரத்தில் துறைமுக பொறுப்புக் கழகமும், இந்தியன் வங்கியும் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஆறுமுகம் என்பவர் இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ-யில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, துறைமுக அதிகாரி போல் மோசடி செய்த கணேஷ் நடராஜன் மற்றும் தரகர் மணிமொழி ஆகிய 3 பேர் மீதும் சி.பி.ஐ கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் 100 கோடி ரூபாயில் 45 கோடி ரூபாய் வரை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மணிமொழி மற்றும் கணேஷ் நடராஜன் மூலம் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்தியன் வங்கி மற்றும் துறைமுக பொறுப்புக் கழகத்தில் உள்ள யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என சி.பி.ஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தரகர் மணிமொழி என்பவரது வீடு, வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் தொடர்புடைய இடங்கள் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பான இடங்கள் என சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் என 22 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள்  அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து பண மோசடியில் ஈடுபட்ட 18 பேரை கண்டறிந்து அதில் 12 பேரை இதுவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. துறைமுக இயக்குனர் என நாடகமாடிய கணேஷ் நடராஜன் மற்றும் தரகர் மணிமொழி, செல்வகுமார், ஜாகிர் ஹுசைன், விஜய் ஹரால்ட், சியாது, அஃப்சார் உட்பட 12 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்து சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 18 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஐ.பி.ஐ அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 6 பேரைத் தேடி அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தவும், கூடுதலாக இதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என கண்டறியவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சி.பி.ஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!