23 மீனவர்களை மீட்க தமிழக அரசு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Nov 3, 2021, 3:53 PM IST
Highlights

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 246 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்றும் அதில் 1.85 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும் எல்.முருகன் குற்றஞ்சாட்டினார். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 244 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜக தமிழக அரசு மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் மன்றத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தமிழக  மின்சாரத்துறையில் செயலிழந்த ஒரு நிறுவனத்தை கைப்பற்றி, அந்த நிறுவனத்தின் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்ய நான்காயிரம் கோடி முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து அதன்மூலம் லாபம் பார்க்க திமுக முக்கிய புள்ளிகள் முயற்சித்து வருவதாகவும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றம் சாட்டியிருந்தார். 

அவரின் இந்த குற்றச்சாட்டை மறுத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உரிய ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட வேண்டும், இல்லையென்றால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய நிலையில், அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு இடையேயான மோதல் வலுத்து அது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தாக்கும் சம்பவம் மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. இலங்கை  கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக கூறிய கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி 5 தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை 54 தமிழக மீனவர்களை கைது செய்தது. கொரோனா நோய் பரவ கூடும் என்ற அச்சம் காரணமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது. இந்நிலையில் தற்போது 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக கூறி மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை இரண்டு படகுகளில் இருந்த முருகன், கந்தன், சிவசக்தி உள்ளிட்ட 23 மீனவர்களை கைது செய்தது.

இது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை, பால்வளத் துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் நேற்றும் இன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தாகக் கூறினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் சார்பில் சரியாக நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளதாகவும், அதை வலியுறுத்தி மத்திய அரசுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்ட முருகன், தமிழக அரசால் 1,178 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது, அதில் ஐந்து நாட்களில் 1300 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பற்றி தமிழக முதல்வர் தவறான செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார் என்றார்.

மேலும், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 246 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்றும் அதில் 1.85 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும் எல்.முருகன் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இலங்கை கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் முழு தகவல்களையும் மத்திய அரசு தமிழக அரசிடம் கேட்டிருந்தது, ஆனால் தமிழக அரசு 25 ஆம் தேதி வரை மீனவர்கள் பற்றிய முழு தகவல்களை தரவே இல்லை, கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டு கொண்டுவர தமிழக அரசு மும்முரம் காட்டவில்லை என்றார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் 2014 பிறகு துப்பாக்கிச்சூடு என்பது நடைபெறவே இல்லை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மீனவர்கள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. திமுக இழிவான பழிவாங்கும் அரசியல் செய்து வருகிறது என வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
 

click me!