
100 கோடி கேட்டு திமுக மான நஷ்ட ஈடு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, சாதாரணமான என்னையும் அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்திற்கு சமமாக நடத்துகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் துபாய் அரசுமுறைப் பயணத்தை அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என திமுக மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு பதிலளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுக்கும் திமுகவுக்குமான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. திமுக அரசையும் தமிழக முதலமைச்சரையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாஜகவே எதிர்க்கட்சி போல செயல்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் தாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் பாஜகவில் செயல்பாடுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதிலும் பெருமளவில் மின்சாரத் துறை, இந்து சமய அறநிலைத்துறையை குறிவைத்து அவரது குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் இதுவரை அண்ணாமலை வெளியிடவில்லை. இந்நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் தொழில் கண்காட்சியில் கலந்து கொள்ளவும், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கிலும் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதாவது தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஸ்டாலின் துபாய் செல்லவில்லை, தனது குடும்பத்தை பெருக்க தனது குடும்ப நிதியை பெருக்க சென்றிருக்கிறார்.
ஊழல் செய்த பணத்தை துபாய் வழியாக மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர முயற்சிகள் நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். அவரின் இப்பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தி திமுக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்காட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலையை கண்டித்துப் பேசினர். அதில் பேசிய ஆர்.எஸ் பாரதி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார், தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால் கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுவோம், தொடர்ந்து பொய்யை மட்டும் அண்ணாமலை பேசி வருகிறார், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்டஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். அதாவது முதல்வரின் பயணத்தை விமர்சித்ததற்காக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி என் மீது மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். திமுகவின் முதன்மை குடும்பம் சாதாரண சாமானியனான என்னையும் அவர்களை போன்ற துபாய் குடும்பத்திற்கு சரி சமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன், தமிழகத்திற்காக என் போராட்டம் துணிவுடன், மக்கள் துணையுடன் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.