உதயநிதி தலைக்கு 10 கோடி ரொம்ப அதிகம் என்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் தெரிவித்துள்ளார்..
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறிய கருத்து, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, டெங்கு, மலேரியா, கொரோனாவை எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும் அதே போல தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும். சனாதானத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்த கருத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன. பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சாமியார்கள் என பல தரப்பிலும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து அமைப்புகள் சார்பில் உதயநிதிக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அயோத்தி சாமியார் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்று உதயநிதி தலைக்கு ரூ.10 பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாங்களாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் தூதர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடிதம் எழுதியுள்ளனர். ஒரு வாரம் ஆகியும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
இதனிடையே சனாதன சர்ச்சை தொடர்பாக தன் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது வழக்குப்போடுவது, உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களில் உதயநிதியை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதே நேரம் உதயநிதிக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மேற்கு மாம்பல பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உதயநிதி குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் “ அயோத்தி சாமியார் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்தது தவறு. அது ரொம்ப அதிகம். அதற்கு அவர் வொர்த் இல்ல.. அது மிக மிக அதிக விலை.. மற்ற விஷயங்களுக்கெல்லாம் விலைவாசி பேசும் நாம், இதற்கும் பேச வேண்டாம். இதுவும் மிக ஜாஸ்தியான விலை..” என்று தெரிவித்துள்ளார்.